எனக்கு வந்திருந்த சம்மன்!
நேற்று எனக்கு ஒரு சம்மன் வந்திருந்தது.
அனுப்பியதும் நான்தான்.
அழைக்கப்பட்டதும் நான்தான்.
நீதிபதியின் இருக்கையில்
என் மனசாட்சி.
சாட்சிக் கூண்டில்
என் கவிதைகள்.
நீதிபதி கேட்டார்…
“உன் வரிகளில் அறிவுரை அதிகம்.
கவிதை குறைவு.
வாக்கியங்களை வெட்டி
வசதியாக வார்த்தைகளாக்கி
வாசித்துவிட்டால்
அது கவிதையாகிவிடுமா?”
நான் சொன்னேன்…
“வாழ்க்கையிடம் அடிபட்டு
அதன் பாடங்களை
வாசித்து வந்தவர்களுக்கு
நான் மீண்டும் வகுப்பு எடுக்கவில்லை.
வாழ்க்கைப் புத்தகத்தை
இப்போதுதான் திறந்திருக்கும்
இளையவர்களுக்காக எழுதுகிறேன்.
முதல் தோல்வியையே
தங்கள் மீதான
இறுதித் தீர்ப்பாக
ஏற்பவர்களுக்காகவும்…
ஒருவர் கைவிட்டதும்
தங்களையே கைவிடத் துணியும்
பூக்கும் வயதுக்காரர்களுக்காகவும்…
சேர்த்தே எழுதுகிறேன்.”
நீதிபதி ஒரு பக்கத்தை
உயர்த்திக் காட்டிக் கேட்டார்,
“கனமான சொற்கள் இல்லை.
மொழியின் செறிவு இல்லை..
இதில் எங்கே
ஒளிந்திருக்கிறது உன் கவிதை?”
“என்
திறமையை நிரூபிக்க
வாசகனைத்
தேர்வெழுத வைக்க வேண்டுமா?
தமிழை நேசித்தும்
அதிகம்
வாசிக்க வாய்ப்பில்லாதவன்
என்
வரியை அணுகும்போது,
அறியாத ஒரு சொல்லால்
அவன் திருப்பி அனுப்பப்பட வேண்டுமா?
எனக்குத் தெரிந்த
பொறுக்கி எடுக்கப்பட்ட
நறுக்குத் தெறிக்கும்
வார்த்தையை ஒதுக்கி வைத்துவிட்டு,
அவனுக்குப் புரியும்
எளிய சொற்களில்
எழுத முயல்கிறேன்.
அந்தச் சொல்லிலும்
அவன் நெஞ்சைத்
தொடும் வலிமை இருக்கிறது.
இக்கரையிலிருந்து
நான் அனுப்பும் எளிய உணர்வுகள்,
இயல்பாக நீந்தி,
அக்கரையில் இருக்கும்
அவனை அடைந்தால் போதும்.
குறுக்கும் நெடுக்கும்
குரளி வித்தை காட்டத் தேவையில்லை.”
“அப்படியானால்
எளிமையே உன் கவிதையா?
அம்மணம் ஆடையாகாது, தம்பி.”
என்றார்.
அந்தக் கேள்வி
என் பதிலைத் தடுத்து நிறுத்தியது.
“இல்லை.
வெறும் அறிவுரையைத் துப்பிவிட்டு
இளையவர்களுக்கு
எளிமையாகச் சொல்கிறேன்
என்று நான் தப்பிக்க முடியாது.
‘எழுந்து நில்’ என்று கட்டளையிடுவது எளிது.
விழுந்தவன்
மண்ணை உதறக்கூட மனமின்றி
அமர்ந்திருக்கும் இடத்தில்,
என் கவிதையும்
அவனருகே அமர வேண்டும்.
அவன் படித்து முடித்ததும்
என் பெயரை மறந்தாலும் பரவாயில்லை.
விழுந்ததே தன் தோல்வியல்ல
என
உணர்ந்து சொல்ல வேண்டும்.
எழுந்து
நிமிர்ந்து செல்ல வேண்டும்.”
நீதிபதி
தன் பேனாவை மேசையில் வைத்தார்.
“உன் நோக்கம்
உன் எழுத்தின் குறைகளை மன்னிக்காது.
எளிய சொற்களைத் தேர்ந்தெடு.
ஆனால் அவற்றுக்குள்
ஆழமாக இறங்கு.
நீ சென்றடைய விரும்பும் இளையவன்
உன் இரக்கத்துக்குரியவன் மட்டுமல்ல;
உன் சிறந்த கவிதைக்கும் உரியவன்.”
வீடு திரும்பினேன்.
என் கவிதையின் கடைசி வரிகளில்
அவன் வாழ்க்கைக்கு
நான்
ஒரு தீர்ப்பு எழுதியிருந்தேன்.
அதை அழித்தேன்.
இன்னும்
முதல் பக்கத்தில்தான் இருக்கிறான்.
அவன் வந்து தனது
முடிவுரை தானே எழுதிக்கொள்ள
இந்த இடம்
மிச்சம் இருக்கட்டும்!
💬 கருத்துகள் (0)