மூன்று குரங்குகள்
கல்லாய் அமர்ந்திருந்த மூன்று குரங்குகள்..,
காலம் கடந்தும் ஒரு கேள்வி கேட்டன—
“உன் கண்கள் கண்ட உண்மைக்கு
உன் நெஞ்சம் ஏன் சாட்சி சொல்லவில்லை..?”
ஒன்று கண்களை மூடியது—
இருளைத் தவிர்க்க அல்ல..,
உலகின் கொடுமையைப் பார்க்கத் தயங்கியதால்…
ஒன்று செவிகளைப் பொத்தியது—
அமைதியைத் தேட அல்ல..,
அழும் உயிர்களின் ஓசை தன்னைத் துளைக்கக் கூடாதென்று…
ஒன்று வாயை மூடியது—
மௌனத்தின் மேன்மைக்காக அல்ல..,
உண்மை சொன்னால் உலகம் தன்னைத் தனிமைப்படுத்துமென்று…
அன்று காந்தியின் அருகில்
அவை மூன்று குரங்குகளாய் நின்றன;
இன்று நம் உள்ளங்களில்
மூன்று மனசாட்சிகளாய் நிற்கின்றன…
தீமையைப் பார்க்காமல் இருப்பது மட்டும் தூய்மையல்ல..,
தீமை கண்டபோது குரல் கொடுப்பதே மனிதம்!
கண்களைத் திற…
செவிகளைத் திற…
வாயைத் திற…
முதலில் — மனசாட்சியைத் திற! 🇮🇳
💬 கருத்துகள் (0)