சுட்டுவிரல்
அன்னையின் விரல் பிடித்து
அடி எடுத்து வைத்தேன்;
ஆசானின் விரல் சுட்ட திசையில்
அர்த்தமுள்ள வாழ்வை அமைத்தேன்!
கரும்பலகை மீது
கரம் உயர்த்திய அந்த விரல்,
கற்றுத்தந்த எழுத்தோ சிலதல்ல…
காலம் முழுதும் வழிகாட்டும்
கலங்கரை விளக்கமல்லவா அது!
விடைத்தாளில் என் பிழைகளைச்
சுட்டிக் காட்டியது அந்த விரல்,
வாழ்க்கைப் பாதையில் பிழையாதிருக்க
பாடம் புகட்டியதும் அதே விரல்!
தடுமாறும் என் கால்களுக்கு
திசை சொன்ன திசைகாட்டி,
தளர்ந்திடும் என் நெஞ்சத்திற்கு
தன்னம்பிக்கை தந்து துணைநின்ற வழிகாட்டி!
திசை தெரியா என் பயணத்தில்
திசைகாட்டிய விரலொன்று…
இன்று நான் சென்றடைந்த சிகரமெல்லாம்
அதன் சுவடுகள் தந்ததன்று…!
நான் கண்டதோ
ஐந்து விரல்களில் ஒன்றை மட்டும்…
ஆனால்,
என் வாழ்கைக் கண்டதோ
ஆயிரம் கனவுகளின்
அர்த்தத்தைச் சுட்டிய ஒரு விரல்!
எழுத்தைச் சுட்டியது அந்த விரல்…
இன்று எதிர்காலத்தைச் செதுக்கியதும்
அதே விரல்!
இன்று
என் விரல் வெற்றியைச் சுட்டிக்காட்டினால்
அதன் பின்னால்
ஒரு காலத்தில்
என் பாதையைச் சுட்டிக்காட்டிய
ஆசானின் அந்த விரல் இருக்கிறது!
நான் கண்ட வெற்றியெல்லாம்
என் கால்கள் நடந்த பாதையல்ல…
என் கனவுகளுக்கு
திசை தந்த
ஆசானின் விரல்
வரைந்த கோடுகள்…!
அதனால் தான் இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கிறது
ஆசான் சுட்ட
அந்த விரலின் மௌன மொழி…!
💬 கருத்துகள் (0)