வெள்ளை எருமை
வெள்ளை எருமை என்றதும் பொய்யென்று நினைத்திடாதீர்கள்
அதற்காக
சுண்ணாம்பின் வெண்மையென்று எண்ணிடாதீர்…
வழக்கமான கருப்பு
வெயிலில் காய்ந்து
வெளுத்ததைப் போலே
நிறம் மாறி இருக்கும்
வெள்ளையில்லை
கட்டுத்தறியை
நாள்தோறும் உடைத்துவிடும்
மூங்கில் முள் வேலியை
லாவகமாய்
கொம்பால் தூக்கிவிட்டு
திருட்டு மேய்ச்சலுக்கு சென்றுவிடும்
சண்டித்தனம் மிக அதிகம்
எங்களுக்கு விழ வேண்டிய அடிகளில் வசவுகளில் பாதிக்குமேல் பெற்றுக்கொண்ட தியாகி அது
அதனால் அலாதியான அன்பு அதன்மேல் எங்களுக்கு
அகன்ற கூட்டுக்கொம்புகள்
மூக்கின் பகுதியும் வெளுத்தேதான் இருக்கும்
சாலையின் ஓரமாய் சாணியோடு உழண்டிருக்கும்
பள்ளிக்கு செல்லும்
பிள்ளைகளின் வெள்ளை உடைகளில்
வாலைச் சுழட்டி அடித்து
புள்ளிகளை வைத்துவிடும்
போவார் வருவாரெல்லாம்
குறைவின்றி பாடிச்செல்வார்
அப்பாவை
குட்டியாக வந்த
விருந்து அது
சாபமோ என்னவோ
மூன்றுமுறை
கன்றுகளை ஈன்றும்கூட
ஒன்றும் தங்கவில்லை
வீட்டின் தோட்டத்தில்
புதைத்த இடத்தில்
கண்ணீர் வழிய
சிலநாட்கள் விரதமிருக்கும்
பிறகு வழக்கமான செயலுக்குத்
திரும்பிவிடும் பேர்வழி…
கன்றுகளில்லாமல்
கைச்சுரப்பிலேயே பால் தந்தது
ஏதோ ஒரு பூச்சிக் கடியால்
ஒரு காப்பு முரடாகிப் போனது
கால்களைக் கட்டித்தான் கறவை
பண கட்டங்கள் வந்தபோது உதவியதால்
அப்பாவின் ஆன்மாவோடு
மிக நெருக்கமானதென்று
நாங்கள் சில நேரம் நினைப்பதுண்டு
அதன் பாலைத்தான்
அருந்தி மகிழ்வார்
தவிட்டையும் புண்ணாக்கு பருத்தி விதைகளையும் குழைத்து வைத்து
மூக்குக் கயிற்றைக்
கையில் பிடித்தே
தின்னு தின்னு என்பார்
தொட்டியில்மூக்கை மூழ்க்கி
தின்றுக்கொண்டே
தலையை ஆட்டும்
சரி என்பதைப்போல்
ஐந்துபுரி கயிற்றைக்கூட
வெடுக்கென்று அத்துவிடும்
பலசாலிதான்
அப்பாவிடம் மட்டும்
நாட்டுப்பண் இசைக்கு
பள்ளிக்கூடப் பிள்ளைகள்
நிற்பதைப்போல அடங்கிவிடும்
கோடை விடுமுறையில்
பொறுப்பை அம்மாவிடம் ஒப்படைத்துவிட்டு
இரண்டுநாட்கள் ஊருக்கு சென்றார்
அப்பாடா!
நாங்கள் பட்ட பாட்டை
ஊரே அறியும்
யாரோ சொல்லக் கேட்டுப் புறப்பட்டுவிட்டார்
அப்பா வருவதை
எப்படி உணர்ந்ததோ
ம்ம்ம்மாஆஅஅஅ என்று
ஓங்கி கத்தியதுதான் தெரியும்
கட்டிப்பிடித்துக்கொண்டு
முகத்தை தடவிக்கொடுத்து
ஆற்றுப்படுத்தினார்
அப்படி ஒரு பிணைப்பை
அப்போதுதான் பார்த்தோம்
ஒருமுறை
வயலில் நடவு நடந்துகொண்டிருந்தது
வழக்கம்போல் கயிற்றை
அறுத்துக்கொண்டு
ஓடத்தொடங்கிவிட்டது
ஆத்திரம் தலைக்கேறிவிட்டது அப்பாவுக்கு…
வாலிபத்தைக் கடந்தவர்தான்
என்றாலும்
தாசா செய்து அடக்குவது
பிடிக்காது அவருக்கு
ஐந்தாறு மைல்தூரம்
அசாத்தியமாய் ஓட்டம் பிடிக்க
பின்தொடர்ந்த அப்பாவும்
முன்னே சென்று வளைத்துப் பிடித்து இழுத்துவந்தார்
அந்த நாள்முதலாக
செருமிக்கொண்டே இருந்தது
என்னவென்று கேட்ட பயந்து
கேட்காமல் இருந்துவிட்டோம்
அம்மாவும் அண்ணன்களும்
என்னென்னவோ
வைத்தியத்தை செய்தார்கள்
நின்றபாடில்லை
பிறகுதான் தெரிந்தது
கோபத்தில் களத்துமேட்டில்
கிடந்த விளக்குமாற்றால்
அடித்துவிட்டிருக்கிறார் என்பது
அந்தச் செய்தியைக்
கேட்டதும் வருந்தி
அடப் பாவி! நாசமாப் போக
என்று அப்பாவை
காதில் கேட்கும்படியாகவே
திட்டித் தீர்த்தார் அம்மா…
மேய்ச்சல் குறைந்து
மெலிந்து தோலாய் போனது
வேறு வழியின்றி பக்கத்து ஊரில் விற்றுவிட்டோம்
அவ்வப்போது மேய்ச்சல் இடத்தில் பார்ப்பதுண்டு
பின்னர் நினைவிலிருந்து மெல்ல விலகிவிட்டது
எங்களை
வழக்கத்துக்கு மாறாக திட்டித்தீர்த்தார் அப்பா
எல்லோரும் கடுப்பாக
பார்த்தபோது சைகையில்
அம்மா சொன்னார்
அந்த வெள்ளையை… வாங்கியவர்கள்
விற்றுவிட்டார்களென்பதை
நாங்களும் கலங்கித்தான்
போனோம் சிலநிமிடம்
அப்பாவும்
அதன் நினைவாக
சிலநாள் சரியாக
உண்ணாமலிருந்தார்
பிறகு மறந்தே போனோம்
நெடுஞ்சாலையில்
வேகமாய் போகையில்
குறுக்கே ஓடிவந்து குறுக்கிட்டது
உடன் காட்சியில் வந்து சென்றது அந்த வெள்ளை…
இப்படி
சில நினைவுகளையும்
சேர்ந்ததாகவே வாழ்க்கைப்
பயணப்படுகிறது…!
💬 கருத்துகள் (0)