உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

பரிசல் போக்கி

அக்கரைக்கும்
இக்கரைக்கும்
ஐந்து கல் தொலைவுதான்
குறுக்காக அல்ல
நெடுக்காக

வெள்ளைக்காரன்
ஆண்ட போது
அவசரமாய்ப் போவதற்கு
ஐந்தாறு பரிசல்கள்
இருந்ததாம்
அப்பத்தா சொன்னதாக
அண்ணன்மார் சொல்வதுண்டு

ஆறு என்றதும்
காவிரி கங்கை என
கனமாக எண்ணிட வேண்டாம்

கனமழையின்
நீர்க்கோர்ப்பை வடித்து
உழவர்களின் உயிரான
பயிரைக் காக்க
தமக்குத்தாமே
வெட்டிக்கொண்ட
வடிகால் வாய்க்கால்தான்

பெயர் மட்டும்
பரிசல் போக்கி
சிலர்
பரிசலாறு என்றும்
சொல்வதுண்டு

நிலத்தின் நீரை
வடிக்க
கண்ணி (வாய்க்)கால்களும்
சில உண்டு
பாப்பான் குமி(ளி)ழி
பெரிய வாய்க்கால்
நடு கண்ணி
கண்டைக்கால் மதகு
காக்காயன்மகன் வாய்க்கால்
பட்டத்தான் வாய்க்கால்
என பெயருமுண்டு

கொள்ளிடத்தின்
நீர் ஏறி
மண்ணியாற்றில் கலக்கும்
மண்ணியாற்று நீர்
கொள்ளிடத்தில் வடியும்
இடைப்பட்ட நாட்களெல்லாம்
ஆங்காங்கே ஈரம்
குழி நீர்கள்தான்

கரையோரம்
சேமை இலை குடைப் பிடிக்கும்
பள்ளிக்குச் செல்லும் சிறுவர்க்கு
சிலேட்டின் எழுத்தை அழிக்க
தண்ணீர்த் தண்டு பூத்திருக்கும்

மய்யத்தில்
புசுவானப் பட்டாசாய்
பச்சைக் கோரைகள்
பூத்திருக்கும்

பாலக் கொடிகள்
ஆட்டுக்கு செழித்துக் கிடக்கும்
சிவப்பும் வெள்ளையுமாய்
அல்லியும் தாமரையும்
போட்டிப்போட்டு சிறுவர்க்காக
காத்திருக்கும்

கழுநீர்ச் செடிகள்
நானும் இருக்கிறேன் என
வருகைப் பதிவை
வகையாகக் கொடுக்கும்

கெண்டையும் கெளிரும்
சண்டையின்றி
உண்டுக் கொழுக்கும்
குரவையும் உலுவையும்
ஆரால் மீன்களோடு
சேற்றைக் குழைக்கும்

வரால்கள்
அரசம் பழத்தை உண்டு
துள்ளிக் குதிக்கும்
செடிகளில் தூங்கிக்கிடக்கும்
நீர்க்குரத்தை பயந்தே
நெஞ்சம் பதைக்கும்

பள்ளக்கு மதகினின்று
வெள்ளத்தின் நீரில்
சில்வண்டுகள் குதித்து மிதக்கும்
நீருக்குள் மூழ்கிக் கிடக்கும்
எருமைகள் மூச்செறிந்து
எதிர்ப்பை விடுக்கும்

இத்தனையையும்
அரசமரத்தின் இருந்து
கிளிகள் பார்த்து
கதைப்பேசி சிரிக்கும்

கீற்று மட்டைகள்
ஒருபுறம் ஊறிக் கிடக்கும்
பச்சை மூங்கில் நீரில்
பாம்பாய் நீண்டு மிதக்கும்
பத்தாயம்
பலகை எல்லாம்
பொங்கலுக்கு இங்கேதான்
குளிக்கும் களிக்கும்

ஆண்களுக்கு
ஒரு துறையும்
பெண்களுக்கு
தனித்துறையும் இருக்க
துணி வெளுக்கும் துறையும் உண்டு
ஆட்டுக்கும் மாட்டுக்கும்
தனியாய் துறை இருக்கும்
நினைத்தாலே மண்மணக்கும்

மாலை வந்தாலே
சோலையாய் மாறிவிடும்
மாயத்தை சொல்ல சொற்களில்லை
இளைப்பாற இளவட்டங்கள்
ஆர்ப்பரித்தே சிரிக்கும்
வழியாகப் போவோர்
வேடிக்கைப் பார்த்தே கடக்கும்

வயது தடைன்றி
வாயடித்து
உறவுகளைக் கிண்டல் செய்யும்
விடலைகளால்
இரவே மணக்கும்

சாரல் மழையிலே
மீன் பிடித்து
கோரையிலே பின்னலைப்போல் செதிலை
அதிலே கோர்த்து வைத்து
தக்கையிலே கண் வைத்து
அக்கம் பக்கம் பார்த்தே
சொக்கி நிற்போம்

கோடையில்
கபடி கிட்டிப்புள்
ஆபியம்(பச்சைக் குதிரை)
நொண்டி(பாண்டி)
பேய்ப்பந்து கண்ணாமூச்சு
கிச்சுகிச்சுத் தாம்பூலம்
விளையாட்டு மைதானம்

மழைக்கால
குளிர்காயும் வெளி
நிரந்தரமாய் இலைக்கோடாய்
இருக்கும் சுவட்டில்
சூதானமாய் வெட்டப்படும் ஆடுபுலி

மணல் குழி நீரில்
வளர்ந்துத் துடிக்கும்
சிறு பொடிகள்
அதனூடே கூட்டமாய்
நீந்தி மீனென ஏய்க்கும்
தவ(க்க)ளை குஞ்சுகள்

இன்னும்…
இன்னும் சொல்ல இனிக்கும்
மீனின் சுவையோ
நெஞ்சினில் எச்சிலை வடிக்கும்

அத்தனையும்
செத்தே ஒழிந்தன
நினைவில் மட்டும்
சினையாய் உறைந்தன

காற்று மட்டும்
ஆற்றில் இருக்க
மணலை இழந்த
குழியின் சுவட்டை
நாய்கள் படுத்து நிறைக்க
கண்களின் காட்சிப் பிழையாய்
ஆங்காங்கே
ரயில் பூண்டுச் செடிகள்
காட்டாமணி செடியோடு உரிமைப் போராட்டம் செய்வதை
கண்டு நெகிழ்கிறது மனம்

அல்லாக் கோயில்
சந்தனக்கூடு திருவிழாவுக்கு
கொடியேற்றும் நாளைக் குறிக்க
குதிரையோடு
சிறுவர் பெண்கள் முதியோர் எல்லாம்
இசைத்து வந்து ஆங்கே
நறுமன ஊதுவத்தி வைத்து
பூக்களைத்தூவிச் செல்வார்
இத்தனை படையல் எதற்கெனில்
அரசங்கன்றை நட்டு வைத்த
அல்லாவின் இளவல் முதியவர்க்கே

ஆற்றின் நடுவே இருந்த கன்றை
சுற்றிவந்து வணங்கும்போது நீரின் சுழியில் சிக்கிக்கொண்டு
நீநீத்தாராம் தம்முயிரை
அத்தா தன்னை வணங்கியே
மொத்தமாய் மகிழ்கின்றார்
முசுலிமான் யாவரும்

ஆமாம் ஆமாம்
பரிசல் போக்கிய
ஐந்தாறு பேரில்
இவரும் ஒருவர் என்பார்
அறிந்தவர் சிலபேர்

நீண்ட நாட்களாய்
அவரின் சிற்பம்
கொள்ளிடக்கரையின் லாக்கு(அடைப்பு) மதகில்
கோட்டோவியமாய் இருந்ததைப்
பார்த்தவர்களில் நானுமொருவன்

இன்றும் அவரின் பெயரை
ஆறு சுமக்கிறது
ஆற்றின் நினைவை
நாங்கள் சுமக்கிறோம்
ஆற்றைக் கொன்ற
பாவச் சுமையை
யார் சுமப்பாரோ…?????

👁 5 வாசிப்பு ☰ 192 வரிகள் ⏱ 3 நிமிட வாசிப்பு

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

வெற்றிநிலவன்.பெ அவர்களின் மேலும் கவிதைகள்

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.