உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

மூன்று குரங்குகள்

நிலவொளி நனைந்த
நிசப்த இரவில்
சிலைமேல் அமர்ந்திருந்த
மூன்று குரங்குகள்
உயிர்பெற்று இறங்கின

முதல் குரங்கு
கண்களை மூடிக்கொண்டது;
தெருவோரம் சிந்திய
ஒரு பெண்ணின் கண்ணீரை
“காணவில்லை” என்றது

இரண்டாம் குரங்கு
செவிகளைப் பொத்திக்கொண்டது;
அவள் இதயத்தில் எழுந்த
ஆயிரம் கதறல்களை
“கேட்கவில்லை” என்றது.

மூன்றாம் குரங்கு
வாயை மூடிக்கொண்டது;
அவளுக்காகப் பேச வேண்டிய
ஒரு நீதிச்சொல்
நாவில் இருந்தும்
“உரைக்கவில்லை” என்றது

அப்போது அந்தப் பெண்
கண்ணீரைத் துடைத்தபடி
அம்மூன்றையும் பார்த்து
மெல்லச் சிரித்தாள்…

நீங்கள் குரங்குகள்;
மௌனம் உங்கள் இயல்பு…
நாங்கள் மனிதர்கள்;
மௌனம் எங்கள் தேர்வு…

அவள் சொன்ன
ஒற்றைச் சொல்லில்
கண்கள் திறந்தன,
செவிகள் திறந்தன,
வாய்களும் திறந்தன
அம்மூன்று குரங்குகளுக்கு…

ஆனால்
அவளைச் சுற்றி நின்ற
மனிதர்களின்
கண்கள் மட்டும் திறக்கவில்லை…

அன்றிரவு
சிலைமேல் இருந்தது
மூன்று குரங்குகள்

இன்றோ
ஒவ்வொரு மௌனத்தின் பின்னாலும்
ஒரு குரங்கு மறைந்திருக்கிறது…

காணாமல் போனது
அந்தப் பெண்ணின் கண்ணீர் அல்ல
அதைப் பார்க்க வேண்டிய
மனிதர்களின் மனசாட்சி!!

👁 37 வாசிப்பு ☰ 49 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

N.Akalya அவர்களின் மேலும் கவிதைகள்

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.