மூன்று குரங்குகள்
அலைபாயும் மனமே!
அருகே வா சற்றே!
காதோடு சொல்கின்றேன்
கவனமாய்க் கேட்டுக்கொள்
உன்னை அடக்கும்
மாய வித்தை
உண்மையில் எனக்குப் புரியவில்லை
கற்றுக் கொடுக்க எவருமின்றி
கவலையோடு வாழ்கின்றேன்
விழிகள் அலைபாய
வெறித்துப் பார்த்தேன் வையகத்தை
காண்கின்ற காட்சி எல்லாம்
கண்ணீருக்கு சாட்சியானது
நல்லவற்றைக் கேட்க நாள்தோறும் தவமிருந்தேன்
நல்லவர் வார்த்தை நானிலத்தில் பயனில்லை
உண்மையே உலகில் வெல்லும் என்று
உலா வந்தேன் பல நாள்
உண்மையைச் சொல்ல எவருமின்றி
உறக்கம் தவிர்த்தேன்
வாழும் மனிதர்
வகையில் கண்டு
சூழும் இடர்கள்
வாழ்வில் உண்டு
மனதில் தெளிவு
நமக்கிருந்தால்
வாழும் முறைமை நமதாகும்
அகிம்சை என்னும் மாமருந்தால்
அகிலத்தில் என்றும்
பிணி நீங்கும்
அண்ணல் காந்தி
அகம் நிறைத்த
மூன்று குரங்குகள்
முன் தோன்றி
மௌனமாய் உதிர்த்த காட்சியே
மக்களுக்கு என்றும் பாடமாகும்
காதோடு சொன்னதை
காசினிக்குச் சொல்லிவிடு.
************************************
தமிழ்நிலா
கோவை மகாலிங்கபுரம்
9842572293
💬 கருத்துகள் (0)