சாளரத்தின் சிறு இசை
என் சாளரத்தின் வழியே பார்த்தேன்
அவனும் அவளும் அழகாய் கைகோர்த்து
எதை எதையோ பேசிக் கொண்டு….
என்னைப் பார்த்ததும் அவள் மட்டும் ஓடிவந்தாள்
அம்மா என்று அழைத்துக் கொண்டே!
அருகில் வந்தவள் அழகழகாய் கதைகள்…
சொல்ல சொல்ல கேட்டுக்கொண்டேன்.
அன்பு மாமா பொம்மைக் கடையில்
அனார்கலி பொம்மை வாங்கி வந்தோம்
பாய் தாத்தா மளிகைக் கடையில்
மளிகை பொருள் வாங்கி வந்தோம்
குட்டிக் கடையில் ரொட்டி வாங்கி
குட்டி நாய்க்கு போட்டுவிட்டு வந்தோம்
மல்லிகா பாட்டி வீட்டுல விசேசமா
மேளம் அடிச்சி பாட்டு பாடுறாங்க
குழந்தை சொன்னதும் நினைவில் வந்தது
அன்பாய் பணிவாய் அரவணைப்பாய் இன்முகத்துடன்
எப்போதும் இருக்கும் பாட்டியின் நினைவு
என்றோ ஒருநாள் எங்களுக்குள் சண்டை …
விதியை முடிக்க நடந்தேன் தூரம்
எதிரில் பாட்டி கண்டதும் வழிமறித்து
அவளைப் பற்றி அளக்க தொடங்கினாள்.
ஏழு வயதில் பெற்றோரை இழந்தேன்
உறவினர் வீட்டில் அடிமையாய் இருந்தேன்
சிலகாலம் கழித்து இவ்வூருக்கு வந்தேன்
ஆதரித்தது ஒருகரம்
அன்பு செலுத்தியது அதே கரம்
ஓடி உழைத்தது அந்த கரம்
ஒருநாள் பிடித்தது வேறொருவர் கரம்
பார்த்தேன் அழுதேன் புலம்பினேன் செய்வதறியாது.
காலம் செல்லச்செல்ல மாறியது என்நிலை
யாரையும் நான் நம்பி வாழவில்லை
நம்பி வருபவரை கைவிடவும் இல்லை
எதுவும் நிரந்தரம் இல்லை வாழ்வில்
இதுவும் கடந்து போகும் வழியில்
பாட்டி சொன்னது நினைவில் வந்தது
ஆதரவற்ற பிள்ளைகள் பாட்டியை கொண்டாடி
அழகழகா வாணவேடிக்கை வண்ண விளக்குகள்
பாட்டியால் சாதித்த பிள்ளைகளின் மகிழ்ச்சி
விழாக்கோலமாய் மாறியது இசைக்கச்சேரி நிகழ்ந்தது
நானும் பார்த்தேன்
என் சாளரத்தின் வழியே சிறுஇசையாய்
முனைவர்.ர.கண்ணகி
செய்யாறு
💬 கருத்துகள் (0)