உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

சுட்டுவிரல்

சுட்டுவிரல்

யாரையும் குற்றம் சொல்ல மட்டும் பிறந்ததல்ல—
உண்மையைச் சுட்டிக் காட்டவும் பிறந்தது!

சட்டசபையில்
சட்டமும் ஒழுங்கும் தடுமாறுகின்றன;
சட்டம் இயற்றும் மன்றத்திலேயே
ஒழுக்கம் மட்டும் ஏன் தடுமாற வேண்டும்?

மது மயக்கத்தில் மாணவிகள்,
கஞ்சா மயக்கத்தில் கல்லூரி மாணவர்கள்,
இன்ஸ்டாகிராம் – மயக்கத்தில் இல்லத்தரசிகள்,
யூடியூப் – மயக்கத்தில் இளைஞர்கள்,
டாஸ்மாக் – மயக்கத்தில் தகப்பன்கள்—
மயக்கத்தில் தள்ளாடுகிறது தமிழகம்!

பசி மயக்கத்தில் காவிரி,
ருசி மயக்கத்தில் நடிகர்கள்,
ஆன்மீகப் பசியில் அனைவரும்,
காதல் மயக்கத்தில் கார்மேகம்,
படிப்பு மயக்கத்தில் மயிலிறகு,
நடிப்பு மயக்கத்தில் நண்பனும்—
எதைத் தேடுகிறோம் என்று தெரியாமல்
எதையோ தேடி ஓடுகிறது வாழ்க்கை!

அரசியல் மேடையில்
வாக்குறுதிகள் வானத்தைத் தொடுகின்றன;
வாக்குச்சாவடிக்குப் பின்
மக்களின் குரல் மட்டும்
ஏன் மண்ணுக்குள் புதைகிறது?

புத்தகப் பையைச் சுமக்கும்
குழந்தையின் தோளில்
கனவுகள் இருக்க வேண்டும்—
கடன் சுமை ஏன் இருக்க வேண்டும்?

சாதியால் பிரிக்கிறோம்,
மதத்தால் பிரிக்கிறோம்,
மொழியால் பிரிக்கிறோம்;
மனிதனாய் சேர்வது மட்டும்
எப்போது?

மரத்தை வெட்டிவிட்டு
மழையைத் தேடுகிறோம்;
நதியை விற்றுவிட்டு
தாகத்திற்கு அழுகிறோம்;
இயற்கையை அழித்த கைகள்
நாளை எதைத் தழுவும்?

பெண்ணின் உடை அல்ல குற்றம்—
உன் பார்வைதான் குற்றம்!
அவள் “இல்லை” என்றால்
அது இல்லைதான்;
அதை மதிக்கக் கற்றுக்கொள், மனிதா!

திருநங்கையின் கண்ணாடியில்
உன் முகம் தெரியவில்லையா?
பாலினம் வேறுதான்—
வலி ஒன்றுதானே!

மண்ணை உழுது
உலகிற்கே சோறு போடும்
விவசாயியின் கையில் விதை இருக்கிறது;
கண்களில் மட்டும்
ஏன் கடன் இருக்கிறது?

கடலோடு வாழும் மீனவனின் படகை
அலைகள் மட்டும் ஆட்டவில்லை—
எல்லைகளும், சட்டங்களும்,
வாழ்வாதாரப் போராட்டமும்
சேர்ந்து ஆட்டுகின்றன!

நினைவில் வை—

ஒரு விரல்
மற்றவரைச் சுட்டும் போது,
மீதமுள்ள நான்கு விரல்கள்
உன்னையே சுட்டுகின்றன!

அதனால்—

அரசியலைக் கேள்வி கேள்,
கல்வியை உரிமையாக்கு,
மயக்கத்தை விலக்கு,
சமூகத்தை மனிதமாக்கு,
இயற்கையைக் காப்பாற்று,
பெண்ணை மதி,
திருநங்கையை அரவணை,
விவசாயியை வாழவிடு,
மீனவனின் கடலை மீட்டுக்கொடு!

மயக்கங்களிலிருந்து
விழித்தெழு தமிழகம்!

சுட்டுவிரல்
வெறும் விரல் அல்ல—
அது குற்றம் சாட்டும் ஆயுதமல்ல;
உண்மையைச் சுட்டும் *மணிகண்டன்*
நாளைய தமிழகத்தின்
நம்பிக்கையின் சுட்டுவிரல்!
விழித்திருக்கும் தலைமுறையின் குரல்,
மாற்றத்தைத் தேடும் *மாயவரம் மணிகண்டன்!*

👁 12 வாசிப்பு ☰ 85 வரிகள் ⏱ 2 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

மாயவரம் மணிகண்டன் அவர்களின் மேலும் கவிதைகள்

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.