பசுமை நகராத நினைவுகளில்…
வகுப்பறைகளில் வரிசைப்படுத்தப் பட்டிருந்தன மரங்கள்.
காலத்தின் உராய்வுகளில் தேய்ந்து,
பழுதுபார்க்கப்பட்டுத் தேய்ந்து,
வண்ணங்கள் பூசப்பட்டுத் தேய்ந்து,
வெளிரிக்கிடக்கின்றன நகர்த்த முடியாதபடி..!
உடல் கிழித்துத் துளையிட்டுப் பகுமானமாய்
சாய்வுகள் செய்யப்பட்டிருக்கும்
எதிர்காலவியத்தை நிகழ்படுத்துவதாய்!
உறங்கி விழிப்பவர்களுக்காகவும்
உறக்கத்தைத் தொலைத்தவர்களுக்காகவும்
தகவமைந்திருந்தன அவை.
நண்பனை அடையாளம் காட்டும் அவசரக்குடுக்கையுமவைதான்.
பந்துமுனைப் பேனாக்களிலும்,
காம்பஸ் முள்ளின் கூர்மையிலும் கிழிக்கப்படும்
காதலர்களின் பெயர்களை
சாதித் தடை வந்த போதும் பிரித்து விடாது
காலத்தோடு கூட்டு வைத்துக் கொண்டு..!
தனிமை கவியும் வேளையின் ஆத்மார்த்தமான தோழமை!
அழுகையையும் புன்னகையையும்
ஒளித்து வைத்துக்கொள்ளும் உயிரில்லாப் பித்து மனம்!
வேர்களில்லையேத் தவிர
அழிக்க முடியாதபடி இன்றைக்கும் ஊஞ்சலாட்டும்
தாய்மை!
💬 கருத்துகள் (0)