அம்மா!
உலக உயிர்களைப் படைத்த அமுத சுரபி – அம்மா!
அழகான அடிவயிற்றில் எம்மை ஈன்றதால் அழியாத தழும்பைப் பெற்றவள் – அம்மா!
உன் இருட்டறை கருப்பையில் எமக்கு ஒலித்த உன் வளையல் சத்தம் எனக்கு நீ பாடிய தாலாட்டு – அம்மா!
எனை சுமக்கும் சுமை கூட உமக்கு சுகம் தான் – அம்மா!
உன் இரத்தத்தைப் பாலாக்கி எமக்கு அளித்தாயே – அம்மா!
உன் வயிற்றில் இருப்பது ஆணா! பெண்ணா! என்று ஆயிரம் பேர் சந்தேகித்தாலும் உனக்கு
மட்டும் நான் என்றும் கடவுள் கொடுத்த மாணிக்கமே – அம்மா!
ஈர் ஐந்து மாதங்கள் எனை தாங்கி நீ பட்ட கஷ்டம் நான் அறிவேன் – அம்மா!
உலகத்தார் எனை புகழ்ந்தாலும் இகழ்ந்தாலும் உனக்கு மட்டும் என்றும் நான் அதிசயமே – அம்மா!
ஆயிரம் ஆயிரம் துயரங்கள் எனை சூழ்ந்த காலத்தில் எனை கரை சேர்க்க கலங்கரை விளக்கமாக இருந்தவளும் – அம்மா!
கொண்டவன் கொண்டாலும் விட்டாலும் எனை காக்கும் கொள்கையில் உறுதியாக நின்றவள் – அம்மா!
பசி என்னை வாட்டும் முன் குறிப்பால் அறிந்து ருசிக்க புசிக்க அறுசுவை கொடுத்தவள் – அம்மா!
மூன்றெழுத்து மந்திரம் மூவுலகையும் வெல்லும் இக் கதாபாத்திரம் – அம்மா!
வெறும் வார்த்தைகள் அல்ல! வெறும் வசனங்கள் அல்ல! மெய்யாகவே கூறுகின்றேன் நமக்கு உயிர்மெய் கொடுத்த இறைவி – அம்மா!
தெரிந்தோ தெரியாமலோ எனை அறியா செய்த பிழைகளைப் பொறுத்தருள்க வேண்டும்
– அம்மா!
ஏழு பிறவி உண்டோ? இல்லையோ? யான் அறியேன்! என்றும் எப்பிறவியிலும் எனக்கு நீயே வேண்டும் – அம்மா!
இப்படைப்பு,
விருதை . இன்பா
(எ)
முனைவர் மா.இன்பக்கனி
விருத்தாசலம்.
💬 கருத்துகள் (0)