மீண்டும்… ஒருமுறை…
மீண்டும்… ஒருமுறை…
மீண்டும் ஒருமுறை
அந்தக் கல்லூரி வாசலைக் கடக்க வேண்டும்…
கட்டிடங்களைப் பார்க்க அல்ல;
என்னை நான் மீண்டும் கண்டெடுத்த
அந்த உலகத்தை மீண்டும் சுவாசிக்க.
அது வெறும் கல்விக்கூடமல்ல;
என் ஆன்மாவைச் செதுக்கிய
அறத்தின் ஆலயம்.
பிறந்தது என் உடலாக இருந்தாலும்,
மறுபிறவி பெற்றது என் உள்ளம்
அந்த வளாகத்தில்தான்.
அந்த வாசலைத் தாண்டும்
ஒவ்வொரு காலையிலும்,
ஆசிரியர்களை நான் காணவில்லை;
“அம்மாக்களை”
கண்டேன்.
அவர்களின் புன்னகை
ஆயிரம் மலர்கள்
ஒரே கணத்தில் மலர்ந்ததுபோல்
என் நாளை ஒளிரச் செய்தது.
பாடங்களை மட்டுமல்ல,
வாழ்க்கையையும் கற்றுத் தந்தார்கள்.
சில நேரம் அறிவுரை,
சில நேரம் அன்பின் கண்டிப்பு,
சில நேரம் அமைதியான அரவணைப்பு…
அவற்றின் பின்னால் இருந்தது
பொய்யற்ற பாசம்.
மூத்த சகோதரிகள்…
எங்களை குழந்தைகளாய்
கையில் ஏந்தி வழிநடத்தினர்.
வைரங்கள் விலைமதிப்புடையவை;
ஆனால்
அவர்கள் விலைமதிப்பற்றவர்கள்.
இளைய சகோதரிகள்…
ஒரு சிரிப்பால்
எங்கள் சோர்வை மறக்க வைத்தனர்.
இரத்த உறவில்லாமலே,
உறவின் இலக்கணத்தை
அவர்கள் கற்றுக் கொடுத்தனர்.
நண்பர்கள்…
தோல்வியில்
“முயன்றதே வெற்றி” என்று
தோளாக நின்றார்கள்.
வெற்றியில்
“இன்னும் உயரம் உண்டு” என்று
என்னை மேலும் உயர்த்தினார்கள்.
இறைவன் எனக்குக் கொடுத்த
மிகப்பெரிய வரம்
செல்வமல்ல…
அம்மாக்களாய் இருந்த ஆசிரியர்கள்,
உயிராய் இருந்த சகோதரிகள்,
நிழலாய் நடந்த நண்பர்கள்.
அந்தக் கல்லூரியின்
ஒவ்வோர் அங்குல மண்ணிலும்
என் காலடிகள் பதிந்திருக்கலாம்;
ஆனால்…
என் இதயத்தின்
ஒவ்வோர் துடிப்பிலும்
அவர்கள் பதித்த நினைவுகள்
என்றும் அழியாது.
காலம் என்னை
எங்கே அழைத்துச் சென்றாலும்,
என் மனம்
– கு. ரிச்சிகா ஸ்ரீ
💬 கருத்துகள் (0)