வான்மழையும் உள்ளமழையும்
வானிலிருந்து பொழியும் மழையானது,
மண்ணை நனைத்து உயிர் கொடுக்கிறது;
ஆனால், மனிதன் உள்ளே பொழியும் மழையானது,
பல தலைவர்களை உருவாக்குகிறது.
மண்ணில் விழும் மழைத்துளி
விதையைத் தழைக்கச் செய்கிறது;
மனதில் விழும் மழைத்துளி
விடியலைப் பிறக்கச் செய்கிறது.
வான்மழை பூமியைப் பசுமையாக்கும்,
உள்ளமழை மனிதனைப் புதுமையாக்கும்;
ஒன்று நிலத்தை வளமாக்கும்,
மற்றொன்று தலைமுறையை வளமாக்கும்.
மழை பொழியும் போது
மண் மணம் வீசுகிறது;
மனம் பொழியும் போது
மனிதநேயம் வீசுகிறது.
வானிலிருந்து வரும் மழை
உயிர்களை வளர்க்கிறது;
மனித உள்ளத்திலிருந்து வரும் மழை
உணர்வுகளை வளர்க்கிறது.
அந்த மழைத்துளிகளில்
சில விதைகள் மரங்களாகின்றன;
அந்த மனத்துளிகளில்
சில மனிதர்கள் தலைவர்களாகின்றனர்.
மழை நின்றாலும்
மண்ணின் பசுமை தொடரும்;
கண்ணீர் நின்றாலும்
மனிதனின் கனவு தொடரும்.
வானம் பொழியும் மழை உலகை வாழ வைக்கிறது;மனிதன் பொழியும் அன்பு உலகை மாற்றி அமைக்கிறது.
– கு.ரிச்சிகா ஶ்ரீ
💬 கருத்துகள் (0)