உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

அம்மா

நான் பிறக்க – தான் அழுதவள்

ஒரு நொடியும் தனக்காய் வாழாதவள்

தன்னை உருக்கி என்னை வார்த்தவள்

இன்பம் எதுவென்று என்றும் உணராதவள்

எதற்கும் உடையா நெஞ்சம் கொண்டவள்

ஏற்றம் காண ஏடு தந்தவள்

பண்பைப் புகட்டி பாரம்பரியம் காத்தவள்

அறியா வயதில் எனைப் பிரிந்தவள்

என்றும் அழியா நினைவுகள் தந்தவள்

உன்னிடம் கூற என்னிடமுள்ள வரிகள்

உயிரால் பிரிந்தாய்
உணர்வாய் வாழ்கிறாய்

அழகுமுக தேவதையே
அழவைத்து போனாய்

எண்ணிலடங்கா நட்சத்திரங்களில்
ஒன்றாய் நீயிருக்கிறாய்
எனுமெண்ணம் கொண்டு
விண்ணைக் காண்கிறேன்

மீண்டும் கிடைக்காதெனத்
தெரிந்தும் காத்திருக்கிறேன்

உன் புன்னகைக்காக

உன் கம்பீரகுரலுக்காக

உன் அன்பிற்காக

உன் அரவணைப்பிற்காக

உன் அதட்டலுக்காக

உன் அறிவுரைக்காக.. . .. .

கடவுள் கண்முன் தோன்றினால் இரு வரம் கேட்பேன்

ஆம்

நீ என்னோடு இருக்கும் வரம் கேட்பேன்

இல்லையேல்

நான் உன்னோடு இருக்க வரம் கேட்பேன்
உன் உலகில்…..

தூரங்கள் பிரிவில்லை தொடமுடியாத தூரத்திற்கு
தொலைந்து போனாய்

தேடித் திரிந்தாலும்
நினைவுகளே மிஞ்சுகிறது நிஜமாய் நீயில்லை

உன்னைப் பிரிந்த நாள் முதல்
இன்னும் தேடுகிறேன்
கிடைக்கமாட்டாயெனத் தெரிந்தும்

நிகழ்ந்தவை எல்லாம்
நிகழாது இருந்திருந்தால்

உன்னுடனான நினைவுகள் நிஜமாய் இருந்திருக்கும்

காலத்தின் பிடியால் காலன் வசமானாய்

கலங்க விட்டு மறைந்து விட்டாய்

நினைவில் இருக்கிறாய்
நினைவு நாள் எதற்கு

கனவில் வாழ்கிறேன்
காத்திருப்புகள் எதற்கு

கண்மூடி நினைத்தால்
காட்சிகளில் விரிகிறாய்

மண்மூடி போனாலும்
மனதிலே வாழ்கிறாய்….

காத்திருக்கிறேன் மகளாய் வா அம்மா….

கே. தாமரைச் செல்வி

👁 61 வாசிப்பு ☰ 54 வரிகள் ⏱ 2 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

கவி கே தாமரை அவர்களின் மேலும் கவிதைகள்

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.